மேஷம்
வேதத்தின் கண் ஜோதிடம். அந்த கண்போன்ற ஜோதிடத்தின் முதல் ராசி மேஷம். தமிழ் மாதங்களில் சித்திரை மாதத்துவக்கம் இந்த மேஷராசியில் தான் ஆரம்பமாகிறது. மேஷராசியின் அதிபதி பரத்வாஜ முனிவரின் மகனும், மங்களக்காரகன், பூமிக்காரகன் என்று வர்ணிக்கப்படுகின்ற செவ்வாய்தான். செவ்வாயை முருகனின் அம்சமாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. பஞ்சபூத தத்துவங்களில் அக்னியைக் குறிக்கும்.
இது ஒரு ஆண்ராசி
அதனால்தானோ என்னவோ, இந்த ராசியில் பிறக்கும் பெண்கள் ஆண்களின் குணத்தை அதிகம் பெற்றிருப்பார்கள். நிர்வாகத்திறமை மிக்கவர்களாக இருப்பார்கள். ஆனால் மேஷராசியில் பிறப்பவர்கள் அதிக பருமனும் இல்லாமல், ஒல்லியும் இல்லாமல் சட்டம் போன்ற உடல் அமைப்பைப் பெற்றிருப்பார்கள். கம்பீரமான தோற்றம் இருக்கும். வயது அதிகரித்தாலும் வாலிபத்தை இழக்காத தோற்றம் கொண்டவர்கள்.
இவர்களது கண்களில் செவ்வரி படர்ந்து காணப்படும். பல்வரிசை சீராகவும், அழகாகவும் அமைந்திருக்கும். இனிமையாக பேசக்கூடியவர்களாக இருந்தாலும், குரலில் ஒரு கண்டிப்பும், கறார் குணமும் கலந்தே இருக்கும். இரக்க குணமும், உதவும் மனப்பான்மையும் கொண்டவர்கள். அதுமட்டுமல்ல வைராக்கிய குணம் கொண்டவர்கள். வாழ்க்கையில் முதலிடத்தைப் பற்றிய கனவு எப்போதும் இருக்கும். கடைசிவரை போராடும் குணம் நிறைந்த இவர்களுக்கு வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தாலும் மனம் தளராமல் போராடும் குணம் மிக்கவர்கள்.
மேஷராசியில் பிறந்தவர்கள் பூமி, காணி நிலம் அமையும் வாய்ப்புகள் அதிகம் பெறுவார்கள். ஆள் அதிகாரம் பெற்றிருப்பார்கள். அரசாங்க ஊழியர்களாகவும், அரசுவழி நன்மை பெறக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். அரசாங்க கௌரவம் தேடிவருமாம். மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு ஐந்து வயதில் நெருப்பினாலும், 7 வயதில் நீரினாலும், 10 வயதில் விஷக்காய்ச்சலினாலும், 20 வயதில் வாய்வுத் தொல்லையினாலும், 28 வயதில் தோல் நோயினாலும் பாதிக்கப்படலாம் என்பது ஜோதிடக் குறிப்பு.
மேஷராசியில் பிறந்தவர்களுக்கு சித்திரை மாதம் சூன்ய மாதமாகும். அதனால் சித்திரை மாதத்தில் எந்த சுபக்காரியமும் செய்யாமல் தவிர்ப்பது நல்லது.
நல்ல நாட்கள் – திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி,
ஆகாத நாள் – சனி
மத்திம நாள் – புதன்
ஆகாத தேதிகள் – 8, 17, 26
ராசியான நிறம் – வெள்ளை, மஞ்சள், சந்தனக்கலர், சிவப்பு
ஆகாத நிறம் – கருப்பு, கருநீலம்
ரத்தினக்கற்கள் – கனகபுஷ்பராகம், மாணிக்கம், பவளம்
ராசியின் நிறம் – சிகப்பு
ராசியில் உள்ள நட்சத்திரங்கள் – அசுவினி 1,2,3,4 பரணி 1,2,3,4 கார்த்திகை 1